கனடாவில் 35 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களிடையே கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருவதாகக் கனடியப் புற்றுநோய் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
முன்கூட்டியே கண்டறியக்கூடிய மற்றும் எளிதில் தடுக்கக்கூடிய இந்த வகைப் புற்றுநோய், நவீன மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் எச்பிவி தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள நிலையிலும் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கனடியப் புற்றுநோய் சங்கத்தின் மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டில் மட்டும் கனடாவில் சுமார் ஆயிரத்து எழுநூறு பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுவர் என்றும், அதில் நானூற்று ஐம்பது பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்டாரியோவின் லேக்ரிட்ஜ் ஹெல்த் அமைப்பின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலி ஆன் பிரான்சிஸ் தெரிவிக்கையில், மருத்துவப் பரிசோதனைகளில் அசாதாரண முடிவுகள் வந்த பின்னர் பெண்கள் தொடர் சிகிச்சைக்குச் செல்லாமல் இடைநிறுத்தம் செய்வதே இந்நிலைமைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது என்றார்.


