Friday, October 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் தரவுக் கசிவு – 176,859 தகவல்கள் திருட்டு

கனடாவில் தரவுக் கசிவு – 176,859 தகவல்கள் திருட்டு

கனடாவின் டொராண்டோ குற்றத் தடுப்பு அமைப்பான Crime Stoppers, பாரிய தரவுக் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து புதிய முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

2022 ஜனவரி முதல் 2025 நவம்பர் வரையான காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட்ட 176,859 தகவல்கள் மற்றும் அவற்றில் இடம்பெற்றிருந்த 14,973 பேரின் பெயர்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுக் கசிவு தொடர்பான அறிவிப்பை, குறித்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் சீன் ஸ்போர்ட்டன் புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் P3 எனப்படும் தகவல் சமர்ப்பிப்பு மென்பொருளிலிருந்து ஹேக்கர்கள் தரவுகளைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளுக்குச் சொந்தமான Navigate360 நிறுவனம், டொராண்டோ குற்றத் தடுப்பு அமைப்புக்கு இதுகுறித்த தகவல்களை வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் P3 மென்பொருள் பாதுகாப்பாக இருப்பதாக Navigate360 நிறுவனம் பலமுறை தெரிவித்ததாகவும், ஏப்ரல் மாதத்தில் டொராண்டோவின் தரவுகள் திருடப்படவில்லை என அறிவித்ததாகவும் சீன் ஸ்போர்ட்டன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜூன் மாதத்தில் டொராண்டோவின் தரவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோது, எந்தெந்த தகவல்கள் கசிந்தன என்பது குறித்து முழுமையான விளக்கம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திருடப்பட்ட தகவல்களின் முழுமையான உள்ளடக்கத்தைக்கூட தமது அமைப்பு இதுவரை பார்வையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தரவுக் கசிவு குறித்து பல மாதங்களாக விளக்கங்களைக் கோரி வருவதாகவும், உரிய பதில்களைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் சமர்ப்பிப்புகள் தற்காலிகமாக நிறுத்தம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொராண்டோ குற்றத் தடுப்பு அமைப்பு தனது இணையத்தளத்தில் இருந்த “Tip Submit” வசதியை நீக்கியுள்ளது.

அத்துடன், டொராண்டோ அமைப்புக்கான புதிய தகவல்களைப் பெறும் வசதியைத் தற்காலிகமாக நிறுத்துமாறு Navigate360 நிறுவனத்திடம் கோரியுள்ளது.

தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையவழி முறைப்பாடுகள் உள்ளிட்ட புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதையும் செயலாக்குவதையும் நிறுத்துமாறு தேசிய அநாமதேய அழைப்பு மையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரவுகளைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு உருவாக்கப்படும் வரை, தொலைபேசி, இணையத்தளம் அல்லது செயலி வழியாக எந்தவொரு தகவலையும் சமர்ப்பிக்க வேண்டாம் என சீன் ஸ்போர்ட்டன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தத் தரவுக் கசிவு தொடர்பான செய்தியை CBC News முதலில் புதன்கிழமை வெளியிட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளும், தரவுப் பாதுகாப்பு குறித்த மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments