ஒன்ராறியோ மாகாணத்தில் மின்னணு அடையாள ஆவணங்களை அறிமுகப்படுத்த போர்டு அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டம் முதற்கட்டமாக ஒன்ராறியோ புகைப்பட அட்டையுடன் தொடங்கப்பட்டு, பின்னர் ஓட்டுநர் உரிமம் மற்றும் மருத்துவ அட்டைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய பொது மற்றும் வணிக சேவை வழங்கல் அமைச்சர் ஸ்டீபன் கிராஃபோர்ட், அரசு சேவைகளை நவீனமயமாக்கும் போது அடையாள நடைமுறைகளை பாதுகாப்பானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், மின்னணு அடையாளங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், குடிமக்கள் அசல் அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையைத் தக்கவைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த மின்னணு முறை முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும், அசல் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் உரிமை அடுத்த ஆண்டு இறுதியில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இதற்கான ஆலோசனைகள் தொடங்கப்பட்டு களப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


