Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐசிசியின் மாதாந்த கிரிக்கெட் வீரர் விருதை நான்காவது தடவையாக வென்றெடுத்தார் ஷுப்மான் கில்

ஐசிசியின் மாதாந்த கிரிக்கெட் வீரர் விருதை நான்காவது தடவையாக வென்றெடுத்தார் ஷுப்மான் கில்

இங்கிலாந்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த அண்டர்சன் – டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் சாதனைகள் நிலைநாட்டிய இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில், ஜூலை மாதத்துக்கான ஐசிசியின் அதிசிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

இவ் விருதுக்கு ஷுப்மான் கில்லுடன் இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் வியான் முல்டர் ஆகியோரும் பிரேரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த மூவரின் ஆற்றல் வெளிப்பாடுகளும் சிறப்பாக இருந்த நிலையில் கடும் போட்டிக்கு மத்தியில் ஷுப்மான் கில், 2025 ஜூலை மாதத்துக்கான விருதை வென்றெடுத்தார்.

ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட்களில் ஓர் இரட்டைச் சதம், 2 சதங்கள் உட்பட 94.50 என்ற சராசரியுடன் 567 ஓட்டங்களை ஷுப்மான் கில் குவித்திருந்தார்.

இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட 25 வயதான ஷுப்மான் கில்லின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

‘ஜூலை மாதத்துக்கான ஐசிசியின் அதிசிறந்த வீரர் விருது கிடைத்ததையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன்’ என கில் தெரிவித்தார்.

‘இந்த அங்கீகாரம் எல்லாவற்றையும் விட சிறப்புவாய்ந்தது. ஏனெனில் இது எனது முதலாவது டெஸ்ட் தொடராகும். மேலும் அணித் தலைவராக நான் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியது என்னைப் பொறுத்தவரை சிறப்பானதும் பெருமைக்குரியதுமாகும்’ என்றார் கில்.

ஐசிசியினால் வழங்கப்படும் அதிசிறந்த வீரருக்கான மாதாந்த விருதை ஷுப்மான் கில் வென்றது இது நான்காவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதத்திலும் 2023 ஜனவரி மற்றும் செப்டெம்பர் மாதங்களிலும் ஐசிசியின் மாதாந்த விருதை கில் வென்றிருந்தார்.

இதேவேளை ஐசிசியின் ஜூலை மாதத்ததுக்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்து சொஃபியா டன்க்லி வென்றெடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான இருவகை மகளிர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல்கள் அவருக்கு மாதாந்த ஐசிசி விருதை பெற்றுக்கொடுத்தது.

நான்கு மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 134.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 144 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற டன்க்லி, மூன்று மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 126 ஓட்டங்களைப் பெற்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments