எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக இந்தியா அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் அல்லது இடைநிறுத்தினால் அதனை எதிர்கொள்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது பல உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியாவையே பெரிதும் நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எல் நினோ இந்தியாவின் விவசாய மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளைப் பாதித்து, இலங்கையானது பொருட்களைப் பெறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தினால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அண்மைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எனினும் இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டுத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனொரு பகுதியாக, இம்முறை பெரும்போக நெல் செய்கையை விட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து உள்நாட்டு அரிசி விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கம் முன்ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது.


