எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் நபர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள், சார்ந்திருப்பவர்களாக எச்-4 விசா மூலம் அங்கு வசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், 2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் எச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிதாக பணி அனுமதி வழங்கப்படாமல் இருப்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிகளும் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


