கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘அனைத்துலக தமிழர் பேரவை’ நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க நேற்று (15) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

விழாவின் ஆரம்ப பகுதியை திரு குயின்றஸ் துரைசிங்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.

அங்கு தலைமை உரையாற்றிய ;அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் தலைவரும் விழாக்குழுத் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மிகவும் காத்திரமானதும் உறுதி நிறைந்ததுமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் தனது உரையில் ‘நாற்பது வருட கால இடப்பெயர்வு மற்றும் புலம் பெயர்வு ஆகியவற்றுக்குப்பின்னர் ஈழத் தமிழர்கள் தற்போது உலகின் பல நாடுகளிலும் தங்களை மீளக் கட்டியெழுப்பி வர்த்தகத்திலும் கல்வியிலும் பொருளாரத்திலும் அறிவிலும் ஆற்றலில் உயர்ந்து நின்ற வண்ணம் உலகிற்கு வழிகாட்டுகின்ற அளவிற்கு பல்வேறு தளங்களில் நிமிர்ந்து நிற்கின்றனர. அந்த ஒ ற்றுமையையும் உறுதியையும் உயர்வையும் உலகத்தவர்களுக்கு காட்டும் வகையிலேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், கற்றறிந்தவர்கள், கனடாவின் மத்திய, மாகாண, மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மொழிப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


