Friday, September 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர், பிரதமர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர், பிரதமர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்  இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை – சீன இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கவனம் செலுத்தினர்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குவதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவி தொடர்பிலும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

வருடாந்தம் வழங்கப்படும் தற்காலிக ஏற்பாட்டிற்குப் பதிலாக, ஒவ்வொரு பாடசாலை வருடத்தின் ஆரம்பத்திலும் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கக்கூடிய வகையில், 3 முதல் 5 வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இருதரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான நடவடிக்கையாக, சீனாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 500 டிஜிட்டல் வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செயலணிக்குழு தொடர்பிலும் பிரதமர் சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

இந்நடவடிக்கையைப் பாராட்டிய புதிய தூதுவர், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இது தொடர்பில் சீனத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட செயலணிக்குழுவிற்கு இடையில் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பிலும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments