இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாகப் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
இதற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தூதரக சேவை மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.
இந்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட பயணிகள் அனைவரும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்ட போதிலும், விசா சேவை மையத்துக்கான செயலாக்கக் கட்டணமாக 1,855 இலங்கை ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.


