இந்த ஆண்டின் கடந்த 8 மாத காலப்பகுதியில் பதிவாகியுள்ள சுற்றுலா வருமானம், கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலா வருமானம் மூலம் இலங்கைக்குக் கிடைத்த தொகை 2,290 அமெரிக்க டொலர்களாகும்.
எனினும், இந்த ஆண்டின் அதே 8 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 2,061.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஈட்டப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 8 மாத காலப்பகுதியில் கிடைத்த சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலத்தில் நாட்டிற்கு 1,535,122 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவர்களிடம் இருந்தே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் சுற்றுலா வருமானமாக 264.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 191,704 ஆகும்.
கடந்த 2025ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் ஈட்டப்பட்ட சுற்றுலா வருமானம் 258.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்படி, இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் சுற்றுலா வருமானத்தில் சிறு உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


