இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தனது 36ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியான முழங்கால் காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வுட், இங்கிலாந்துக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும், 38 T20 சர்வதேச போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தையும், 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தையும் வென்ற இங்கிலாந்து அணிகளில் அவர் இடம்பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பேர்த் ஆஷஸ் டெஸ்ட் போட்டியே அவரது கடைசி சர்வதேச ஆட்டமாக அமைந்தது.
மருத்துவ ஆலோசனையின்படி இனி டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்வது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்ததாக மார்க் வுட் கூறியுள்ளார்.


