பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், உலகக்கோப்பை வென்ற முன்னாள் தலைவருமான இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் சிறை நிலைமைகள் குறித்துக் கவலை தெரிவித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 7 முன்னாள் தலைவர்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கிற்கு (Penny Wong) அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஆலன் போர்டர், ஸ்டீவ் வாக், கிரேக் சேப்பல் உள்ளிட்ட 7 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில், “நாங்கள் அரசியலாகப் பேசவில்லை… சக கிரிக்கெட் வீரரின் அடிப்படை மனித உரிமை மற்றும் மருத்துவ வசதிகளுக்காகவே பாகிஸ்தான் அரசிடம் முறையிடுமாறு அவுஸ்திரேலிய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் இம்ரான் கானின் மகன்கள், அவரது மோசமான உடல்நிலை குறித்து அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் தலைவர்கள் இம்ரான் கானுக்காகக் குரல் கொடுப்பது இது மூன்றாவது முறையாகும்.
ஏற்கனவே கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய ஜாம்பவான்களும் இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனக் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


