Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் இளைஞன் வெட்டி கொலை

யாழில் இளைஞன் வெட்டி கொலை

யாழில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்து இளைஞனை பதிவு திருமணம் செய்து சென்ற நிலையில், இளைஞன் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து இளைஞன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வீட்டிற்கு சற்று தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் இளைஞன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞனின் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் நள்ளிரவில் அரங்கேறிய இச்சம்பவம் யாழ்ப்பாணம் அம்மகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments