பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஆஞ்சக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மா (வயது 45). பழங்குடியினரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் இறந்து விட்டார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வள்ளியம்மா மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து கிடைக்கவில்லை. இதுகுறித்து புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வள்ளியம்மாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் வள்ளியம்மா வேறொருவருடன் பழகியதாக சந்தேகித்த பழனி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.
சம்பவத்தன்று வனப்பகுதியில் விறகு சேகரித்து கொண்டிருந்த போது, வள்ளியம்மாவை கோடரியால் தலையில் அடித்து கொலை செய்து, வனப்பகுதியில் குழி தோண்டி உடலை புதைத்தது தெரியவந்தது. இதனை பழனி போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், தலையில் ஏற்பட்ட காயத்தால் வள்ளியம்மா இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


