அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
ஆனால் இரண்டு நாடுகளும் அதற்கு இணங்காததால், இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீத கூடுதல் வரி விதித்தார். ஆனால் சீன பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் ட்ரம்ப், நேட்டோ நாடுகளும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதனால் உக்ரைன் – ரஷியா போர் முடிவுக்கு வரும் என அவர் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, நேட்டோ நாடுகள் சீனாவுக்கு எதிராக 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
“நேட்டோவின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷியாவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பலவீனப்படுத்துகிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, சீனா, இந்தியாவைத் தவிர துருக்கி, ஹங்கேரி, ஸ்லோவாகியா போன்ற நாடுகளும் ரஷியாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கி வருகின்றன.


