டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ கோரினால் அன்றி, அல்லது பணியை நிறுத்த அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்தால் அன்றி, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய இன்று காலை 6 மணி வரையிலான நிலைவர அறிக்கையின்படி, இதுவரை 193 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல் நவம்பர் 28 அன்று கரையைக் கடந்தது. இதனால் நெடுஞ்சாலைகள், தொடருந்து பாதைகள், மின்சார விநியோகப் பாதைகள், நீர்ப்பாசனத் தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் உட்பட நாட்டின் உட்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்த வானிலை சார்ந்த அனர்த்தங்களால் நாடு முழுவதும் சுமார் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பகல் நேரங்களில் மட்டுமே தேடுதல் பணிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள், மோப்ப நாய்களுடன் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கையில் உள்ளனர். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் பணியைக் கைவிடுமாறு கோரினால் அன்றி, தேடுதல் பணிகள் தொடரும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி. தம்மிக பட்டபெந்தி, சில மண்சரிவு இடங்களில் இன்னும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
“சில இடங்களில் மண்சரிவுகள் இன்னும் தீவிரமாக உள்ளன. அங்கே சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது. உதாரணமாக, துல்ஹிரிய பகுதியில் மக்களை மீட்க விரைந்த மூன்று பேர், மண் மேடு சரிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்து விட்டனர்.”
மேலும், சில இடங்களில் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் கடினமானதாக இருப்பதால், தேடுதல் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தேடுதல் பணிகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், “நாம் இன்னும் அனர்த்தங்களுக்குப் பதிலளிக்கும் சூழ்நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


