Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதியின் நல்லிணக்க அழைப்பு;

ஜனாதிபதியின் நல்லிணக்க அழைப்பு;

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து,இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், இலங்கை எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இந்த ஆண்டு டிசம்பரில் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ள ‘இலங்கை தின’ நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவும், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுவதை இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான தேசிய செயற்பாடு மற்றும் தேசிய, மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆகியவற்றுக்கு நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், மத மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அப்பால், அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், செயலாளர் பிரின்ஸ் சேனாதிர ஆகியோருடன், தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன் மற்றும் பழனி திகம்பரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ரிஷாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, இலங்கை தொழிலாளர் கட்சி காதர் மஸ்தான், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இளையதம்பி ஸ்ரீநாத், கவிந்தரன் கோடீஸ்வரன், டி.ரவிஹரன் மற்றும் சுயாதீனக் குழுவின் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments