அனர்த்த நிலைமையில் நாட்டை குழப்பும் வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் எச்சரித்துள்ளார்.
முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளதாகவும், கணினி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,பொய்யான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அனர்த்த நிவாரண முகாம்களில் துஷ்பிரயோகம், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.
அனர்த்த காலத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அவசரத் தேவைகளுக்கு 1912 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை எடுத்துள்ளது என்றும், அதன் போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா காவல்துறை பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) காவல் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ, விமான நிலையத்தின் காவல் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும்.


