ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியால் சேனாதீரவின் கைது தொடர்பாக, அவரது சகோதரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
மிட்டெனிய, தலாவ மற்றும் கரியமதித்த பகுதிகளில் உள்ள காணிகளில் இருந்து சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அவர் கடந்த வியாழக்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார்.
முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவரது சகோதரி, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) தன்னிச்சையாகச் செயல்பட்டதாக குற்றம் சுமத்தியதோடு, இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கலுக்குச் சமம் எனவும் சாடினார்.
கைது நடவடிக்கையின் போது அதிகாரிகள் குடும்பத்தினரை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் தனது பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனது சகோதரர்கள் இருவரும் SLPP உறுப்பினர்களாக இருப்பதால், இந்தக் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவர் நம்புவதாகவும் தெரிவித்தார்.


