கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில், அம்பாறை – பொத்துவில் அறுகம்பை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சாலிந்த நவரத்தனவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
1500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 150 ரூபாயிற்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டது.
இதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட பொத்துவில் நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


