டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், இந்திய குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) செங்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான வைத்தியர் ஒருவர், காவல்துறையினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு நடப்பதற்கு முன்னரே, தாமும் தமது சகாவான உமர் என்பவரும் இணைந்து செங்கோட்டை பகுதியை நோட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே செங்கோட்டை நோட்டமிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளி பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள மருத்துவர் செங்கோட்டையை நோட்டமிட்டதாக கூறப்படும் அவரது சகாவான உமர் என்பரே, செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே சிற்றூந்து வெடித்தபோது உயிரிழந்தவர் என நம்பப்படுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


