Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நூரித் தோட்டத்தில் போராட்டம்!

நூரித் தோட்டத்தில் போராட்டம்!

மலையக நிருபர்

கேகாலை மாவட்டம், தெரணியாகல நூரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூரித் தோட்டத்தில், 14 வயதுடைய சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (06) அப்பகுதி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

சட்டவிரோத கசிப்பு விற்பனையே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவித்து, அதற்கு நீதி கோரியும், மது அரக்கனை ஒழிக்க வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2ஆம் திகதி நூரித் தோட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இச்சிறுவனின் பெற்றோர் தொடர்ச்சியாக மதுப் பழக்கத்திற்கு (கசிப்பு) அடிமையானவர்கள் என்றும், அவர்களது அதீத மதுபோதையே சிறுவனின் மர்ம மரணத்திற்கு நேரடி அல்லது மறைமுகக் காரணியாக அமைந்திருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூரித் தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராகக் கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்த முக்கிய கருத்துக்கள்:

தோட்டத்தில் தாராளமாகக் கிடைக்கும் கசிப்பு காரணமாக பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.

மது போதையினால் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தனர்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் கூட இந்த நச்சுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால், ஒரு சமூகமே அழியும் நிலையில் உள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:

தற்போதைய ஜனாதிபதி அவர்கள் நாட்டில் போதைப்பொருள் மற்றும் மது ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகிறார். எமது அரசாங்கத்தின் கீழ் நூரித் தோட்டத்தில் நிலவும் இந்தக் கசிப்புப் பிரச்சினையை வேரோடு அழிக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.”

தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இனியும் ஒரு உயிர் இவ்வாறான காரணங்களால் பறிபோகக் கூடாது என்பதற்காகவும், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நூரித் தோட்டத்தில் கசிப்பு விற்பனையை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments