இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகராக பணியாற்றிய பால் ஓவென்டன், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டயான் அப்போட் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய சர்ச்சையையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2017இல் தொழிற்கட்சியின் இளநிலை பத்திரிகை அதிகாரியாக இருந்தபோது, சக ஊழியர்களுடன் உரையாடிய பால் ஓவென்டன், டயான் அப்போட் குறித்து இழிவான மற்றும் பாலியல் ரீதியாகவும் குறிப்புகளை பகிர்ந்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராஜினாமா செய்த பால் ஓவென்டன், “அந்த முட்டாள்தனமான உரையாடலால் ஏற்பட்ட காயத்திற்காக வருந்துகிறேன்” என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமரின் அலுவலகம், இந்தச் செய்திகள் “பயங்கரமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் டயான் அப்போட் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டால், இத்தகைய கருத்துக்களுக்கு அரசியலில் இடமில்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
தொழிற்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது சுயேச்சை எம்.பி.யாக உள்ள டயான் அப்போட் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


