வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, AIMIM, ஒய்சிஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் பேரில், உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கையும், நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
இன்று நடைபெற்ற விசாரணையில், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதேசமயம், சில முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


