நமது நிருபர்
வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்ய வேண்டாம் எனவும், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் நுவரெலியாவில் நேற்று (10) போராட்டம் இடம்பெற்றது.
“ இலங்கையில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் காலகட்டத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல் மலையக மரக்கறிகளுக்கு உரிய விலையை நிர்ணயிக்கத் தவறியதால் உற்பத்தி செலவு அதிகரித்து விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது.” என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, அவற்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த மையத்திற்கு அருகில் தொடங்கிய போராட்டம், நுவரெலியா நகர் ஊடாக பொருளாதார மத்திய நிலையம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வியாபார நிலையங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இன்று வழமைபோல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.


