பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு அனுப்பியுள்ளார். மோடியின் “Ek Ped Maa Ke Naam” (ஒரு மரம் தாயின் பெயரால்) என்ற சுற்றுச்சூழல் முன்முயற்சியால் ஈர்க்கப்பட்ட அவர், கடம்ப மரக்கன்றை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த தகவலை பிரிட்டன் தூதரகம் எக்ஸ் (X) வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “இந்த பரிசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இரு தலைவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, இதே முன்முயற்சியின் கீழ், அவர் மன்னர் சார்லஸுக்கு “சோனோமா” மரக்கன்றை பரிசளித்திருந்ததாகவும் தூதரகம் நினைவூட்டியுள்ளது.
“காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பும், காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டுறவின் முக்கிய தூண்கள்” என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ரஷிய அதிபர் வ்லாதிமிர் புதின், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


