ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து தேடிவரும் ஒரு யூடியூபர், ஜனாதிபதி செயலகத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரி தனது தகவலை நிராகரித்த முடிவை எதிர்த்து தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேல்முறையீடு செய்துள்ளார் என சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் உள்நாட்டுப் பயணம் மற்றும் தங்குமிடத்திற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செய்த செலவுகள் குறித்த தகவல்களை அவர் கோருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜினாத் பிரேமரத்ன என்ற குறித்த யூடியூபர், 2016ஆம் ஆண்டு 12ஆம் எண் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் நேற்று(07) இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
மேற்கண்ட முடிவை மறுபரிசீலனை செய்து கோரப்பட்ட தகவலை வெளியிட அல்லது வெளிப்படைத்தன்மை மற்றும் ஒரு குடிமகனின் தகவல் அறியும் உரிமையின் கொள்கைகளுக்கு ஏற்ப பொருத்தமான வழிகாட்டுதலை வழங்க தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலையீட்டைக் கோரினார்.
கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யூடியூபரால் செய்யப்பட்ட தகவல் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தகவல் அதிகாரி எடுத்த முந்தைய முடிவை ஜனாதிபதி செயலகத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரி உறுதி செய்தார் என்பதும் இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


