ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. போட்டி முடிந்தவுடன், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கைகொடுக்காமல் வெளியேறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் திகதி ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் தீவிரதாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணிக்கு நாணய சுழற்சியின் போதும், போட்டியின் முடிவிலும் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறினர்.
இவ்வாறு கைக்கொடுக்க மறுத்த இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டுணர்வுக்கு எதிராக நடந்து கொண்டதாக இந்தியா மீது ஐசிசியில் பாகிஸ்தான் வாரியம் புகார் செய்தது. அத்துடன் நாணய சுழற்சிக்கு முன்பாக ‘கை கொடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று போட்டி நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் தனிப்பட்ட முறையில் இரு அணி தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியது.

இதன்காரணமாக அவரை உடனடியாக நீக்காவிட்டால் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறுவோம் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனை விசாரித்த ஐசிசி, இரு அணி தலைவர்களிடமும் கை கொடுக்க வேண்டாம் என்று ஃபைகிராப்ட் சொல்லவில்லை என தெரிய வந்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியானது. அத்துடன், போட்டி முடிந்ததும் கை கொடுப்பது கட்டாயம் என்று எம்சிசி விதிமுறை சொல்லாததால் இந்திய அணி மீது ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாகிஸ்தான் கோரிக்கையின் படி, ஆண்டி ஃபைகிராப்டை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்கவில்லை. ஐசிசி இந்திய அணி தலைவர் சூரியகுமார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆசியக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேற முடிவெடுத்தது. ஆனால், இதற்கு முன் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வாரியத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்தியாவை எதிர்த்து ஆசியக் கோப்பையிலிருந்து விலகினால் ஆசிய கவுன்சிலில் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் லட்சக்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும். அத்துடன், ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருப்பதால் பாகிஸ்தானுக்கு சாதகமாக எதுவும் நடக்காது ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேறு வழியின்றி ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று தலைவர் மோசின் நக்வி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் – அமீரகம் போட்டிக்கு பாகிஸ்தான் அணியினர் மைதானத்திற்கு வந்துள்ளனர். இதன்காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஆண்டி ஃபைகிராப்ட் நடுவராகவும் உள்ளார். மொத்தத்தில் இந்தியாவுக்கு எதிராக மாஸ் காட்ட நினைத்த பாகிஸ்தான் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அடங்கி போனமை குறிப்பிடத்தக்கது.


