17ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று (09) துவங்கியது. டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை 94 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது. அணியின் சார்பில் Sediqullah Atal ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்ச பங்களிப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, 189 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹொங்கொங் அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போராடியது. இறுதியில் 20 ஓவர்களை முடித்தபோது 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக 21 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசிய அஸ்மதுல்லா ஒமர்சாய் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று (10) இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


