மண்சரிவு அபாயம் தொடர்பில் அதி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடகீழ் பருவப்பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்திற் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் நேற்று நள்ளிரவு விடுக்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அதி அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாஹத்தஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்ட, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரள, பன்வில, கங்கவட்ட கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாஹத்ததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேகாலை மாவட்டத்தின் கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கோஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதிகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


