உலகக் கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை 60 ரசிகர்கள் இலவசமாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வழிமுறையின் போது பணம் செலுத்தும் கட்டமைப்பு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த டிக்கட்டுகள் இலவசமாக அந்த ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக FIFA நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்த நுழைவுச்சீட்டுகள் தற்போது அவர்களுக்காக தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், 7 நாட்களுக்குள் அதற்குரிய முழுமையான தொகையைச் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு FIFA நிறுவனம் சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் பணம் செலுத்தத் தவறினால், குறித்த ஒதுக்கீடுகள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்பட்டுள்ள இந்தத் தவறு மற்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து FIFA நிறுவனம் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.


