பாகிஸ்தானிலிருந்து ஜப்பானுக்குள் கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல நுழைய முயன்ற 22 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் சியால்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த அந்தக் குழுவின் ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததால், ஜப்பான் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழுவினர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும், அவர்கள் உண்மையில் கால்பந்து வீரர்கள் அல்ல என்றும் தெரியவந்தது. இதையடுத்து, ஜப்பான் அரசு அந்தக் குழுவினரை நாடு கடத்தியது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு நிறுவனம் (FIA) வெளியிட்ட செய்தியில், முக்கிய சந்தேக நபராக மாலிக் வகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், “கோல்டன் ஃபுட்பால் ட்ரையல்” என்ற பெயரில் ஒரு போலி கால்பந்து கிளப்பை பதிவு செய்து, அந்தக் குழுவினரை வீரர்களாக நடிக்க பயிற்சி அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் ஆள்கடத்தல் தொடர்பானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


