Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியீடு: பல மில்லியன் பக்கங்கள் மறைப்பு? கடும் சர்ச்சை!

எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியீடு: பல மில்லியன் பக்கங்கள் மறைப்பு? கடும் சர்ச்சை!

பாலூலகையே உலுக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சுமார் 30 லட்சம் புலனாய்வு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (Department of Justice) தற்போது வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்த வெளியீடு திருப்திகரமாக இல்லை என்றும், இன்னும் பல மில்லியன் முக்கிய ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்’ (Epstein Files Transparency Act – EFTA) படி, கடந்த டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், சுமார் ஆறு வாரங்கள் காலதாமதமாகவே இந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

நீதித்துறையின் விளக்கம்: “பணி முடிந்துவிட்டது”

அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் (Todd Blanche), இந்த ஆவண வெளியீடு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், சட்டத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் மிக விரிவான ஆவண ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் சுமார் 60 லட்சம் பக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அவற்றில் பல பிரதிகள் (Duplicates) மற்றும் தொடர்பில்லாத தகவல்கள் இருந்தன. அதனால்தான் 30 லட்சம் பக்கங்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன் நீதித்துறையின் கடமை முடிவடைகிறது,” என்றார்.

“இது ஒரு திட்டமிட்ட மறைப்பு” – வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு

நீதித்துறையின் இந்த விளக்கத்தை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு ஏற்க மறுத்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடும் ‘மெர்சன் லா’ (Merson Law) நிறுவனத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிளாட்கின் (Jennifer Plotkin) கூறுகையில், “அரசாங்கம் இப்போதும் பொறுப்பேற்க மறுக்கிறது.

நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்களை எப்ஸ்டீன் சீரழித்ததற்கு அரசாங்கமும் ஒரு காரணம்.

இந்த ஆவணங்கள் அரசு மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டதையே நிரூபிக்கின்றன,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

பெண்கள் உரிமை வழக்கறிஞர் டாக்டர் ஆன் ஒலிவாரியஸ் (Dr Ann Olivarius) ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்:

“எப்ஸ்டீன் எவ்வளவு மோசமானவர் என்பது ஏற்கனவே எங்களுக்குத் தெரியும்.

எங்களுக்குத் தெரிய வேண்டியது, அவருக்கு இத்தனை காலம் பாதுகாப்பு வழங்கியது யார் என்பதுதான்.

2007-ல் நடந்த விசாரணையை நிறுத்தச் சொல்லி போன் செய்தது யார்? கிரிமினலைப் பற்றித் தெரிந்து கொள்வதில் பலனில்லை, அவருக்குக் கேடயமாக இருந்தவர்களைப் பற்றிய உண்மைகளே வெளிவர வேண்டும்.”

மாயமான 30 லட்சம் பக்கங்கள் எங்கே?

ஆய்வு செய்யப்பட்ட 60 லட்சம் பக்கங்களில் பாதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஒலிவாரியஸ், நீதித்துறை தங்களுக்குத் தேவையானதை மட்டும் வெளியிட்டுவிட்டு, மற்றவற்றைத் தணிக்கை (Redaction) செய்வதாகக் குற்றம் சாட்டினார். இதே கருத்தை ‘ரேடார் ஆன்லைன்’ (Radar Online) இணையதளமும் முன்வைத்துள்ளது.

மில்லியன் கணக்கான ஆவணங்கள் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வராமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

மரியா ஃபார்மர் (Maria Farmer) என்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ஜெனிபர் ஃப்ரீமேன் கூறுகையில், “இது ஆரம்பத்திலிருந்தே ஒரு குழப்பமாகவே உள்ளது.

காலக்கெடுவை மீறுவதும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைத் தணிக்கை செய்யாமல் வெளியிடுவதும் அரசாங்கத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

அதே சமயம், குற்றவாளிகளின் பெயர்களை மட்டும் மறைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் ரீதியான மோதல்கள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

மேரிலாந்து காங்கிரஸ் உறுப்பினர் ஜேமி ராஸ்கின் (Jamie Raskin) கூறுகையில், “இங்கே ஒரு முழுமையான மறைப்பு (Cover-up) நடப்பதை நாம் பார்க்கிறோம்.

60 லட்சம் ஆவணங்கள் இருப்பதாகக் கூறிவிட்டு, 30 லட்சத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு கையைத் துடைத்துக் கொள்வதை ஏற்க முடியாது.

அரசாங்கம் எதைக் காட்ட விரும்புகிறதோ, அதை மட்டுமே நாம் பார்க்கிறோம்,” என்று சாடியுள்ளார்.

ஆனால், நீதித்துறை அதிகாரி ஒருவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

“இது ஒரு தேய்ந்து போன வாதம். சட்டத்திற்கு உட்பட்டு 35 லட்சம் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எவை வெளியிடப்படவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெளிவாக விளக்கியுள்ளோம்,” என்று அவர் பதிலளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments