உத்தரப் பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர், ஜார்கண்டின் பலமு மாவட்ட ஜார்காட் பகுதியில் இருந்த தனது யானையும் பாகனையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார். யானையைத் தேடியும் கிடைக்கவில்லை என்றும், அதன் உரிமை எண்ணையும் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வன அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பலமுவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்ததாகவும், அங்கிருந்து மிர்சாபூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். பலமுவில் யானை பாகனிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் யானையுடன் பாகன் மாயமானதாகவும் கூறினர்.
இந்த விவரங்களை வனத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


