இந்திய தேர்தல் ஆணையகம் வாக்காளர்களுக்கு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் முறையாக வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் ஆகியவை வண்ண நிறங்களில் இடம்பெறும் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்களை எளிதில் கண்டறியும் விதமாக, இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இனி வண்ண புகைப்படங்கள் இடம் பெறவுள்ளது.
வாக்குப்பதிவுகளுக்கு EVM எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் ஆகியவற்றை பொருத்தப்பட்டிருக்கும். தற்போது வரை வேட்பாளர்களின் புகைப்படங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் வேட்பாளர்களை எளிதில் கண்டறியும் வகையில், இனி வண்ண புகைப்படங்கள் இடம் பெறவுள்ளது. வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இவை நடைமுறைக்கு வரும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய வடிவமைப்பில் வேட்பாளரின் புகைப்படம் முக்கிய இடம் பிடிக்கும்.
அதன்படி, தேர்தல் நடத்தை விதிகள், 1961 விதி 49B-ன் கீழ் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர் பெயர்கள், NOTA பெயர்கள் ஒரே எழுத்துருவில் வரும் எனவும், வாசிக்க எளிதான அளவிலும் இவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. EVM வாக்குச்சீட்டுகள் 70 GSM தாளில் அச்சிடப்படும். சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இளஞ்சிவப்பு நிறத் தாள் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட RGB மதிப்புகளுடன் தாள் தயாரிக்கப்படும். இது வாக்காளர்களுக்கு எளிதாகவும், குழப்பமின்றியும் வாக்களிக்க உதவும் என்று தேர்தல் ஆணையகம் கூறியுள்ளது.

தற்போது வரை வேட்பாளர் பெயர், சின்னம், வரிசை எண் மட்டுமே இருந்தன. புகைப்படங்கள் சிறியதாகவோ அல்லது இல்லாமலோ இருந்தன. இந்நிலையில், தற்போது வாக்குச்சீட்டு வடிவமைப்பு முழுமையாக மாறியுள்ள நிலையில், இது கடந்த ஆறு மாதங்களில் ஆணையத்தின் 28 சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படங்கள் அச்சிடப்படும் முறை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தொகுதிகளில் ஒரே பெயர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம் பெறுவதால், வாக்காளர்களுக்கு வேட்பாளர் விவரங்களை கண்டறிவதில் சிரமம் நிலவியது. இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும் விதமாக புதிய முறையை தேர்தல் ஆணையகம் கொண்டு வரவுள்ளது. வரும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்படி, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்முடன் இணைந்து கொள்ள – https://whatsapp.com/channel/0029VbBy05MLSmbaJdSp142u
முகநூல் பக்கம் – https://web.facebook.com/profile.php?id=100066468895795


