பீஹாரில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்து, பட்டியலில் திருத்தங்கள் செய்துள்ளனர்.
இதன் போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து, தங்கள் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
பீஹார் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாலும், நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, பெரும்பாலான மாநிலங்களில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தப் பணி 2002–2004 இடையே நடந்தது. இதற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மாநில அதிகாரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
மேலும், 12 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்தால் மட்டும் வாக்காளர் பெயரை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பீஹாரில் 2003ம் ஆண்டு சிறப்பு திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற 4.96 கோடி வாக்காளர்களுக்கு பிறந்த தேதி மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


