Thursday, March 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திட்டமிட்டபடி கல்வி மறுசீரமைப்பு அமுலாகும்:பிரதமர்

திட்டமிட்டபடி கல்வி மறுசீரமைப்பு அமுலாகும்:பிரதமர்

இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நீக்கி, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘ஐந்து முக்கிய துறைகளின்’ கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இதற்கென 2026ஆம் ஆண்டு பாதீட்டில் 24,986 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும் பகுதி, அதாவது 17,542 மில்லியன் ரூபா பாடசாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படவுள்ளது.

ஏனைய நிதியானது பாடத்திட்ட மேம்பாட்டிற்கு 6,084 மில்லியன் ரூபா, மனிதவள மேம்பாட்டிற்கு 1,026 மில்லியன் ரூபா, மதிப்பீட்டு முறைகளை நவீனமயப்படுத்த 298 மில்லியன் ரூபா மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு 36 மில்லியன் ரூபா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இதுவரை நடைமுறையிலிருந்த பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்ட மற்றும் பாடங்களை மனப்பாடம் செய்யும் முறைக்கு இந்த மறுசீரமைப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருவியைப் பற்றிப் புத்தகத்தில் படித்து அதன் பாகங்களை மனப்பாடம் செய்வதை விட, அந்த கருவியை நேரடியாக இயக்கிப் பழகும் நடைமுறைத் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காகப் புதிய பாட அலகுகள் (Modules) மற்றும் நவீன வகுப்பறைச் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், புதிய பாடத்திட்டங்கள் 2026ஆம் கல்வியாண்டில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி, தரம் 6 மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் திகதியிலிருந்தும், தரம் 1 மாணவர்களுக்கு ஜனவரி 29 ஆம் திகதியிலிருந்தும் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளளது.

இவற்றுக்கு இணையாக, மாணவர்கள் புதிய பாடங்களைத் தெரிவு செய்தல் மற்றும் புதிய முறைமைக்கு  தயார்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுத் திட்டங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் 132,580 ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 7,181 ஆசிரியர் பயிற்றுவிப்பு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு பயிற்சிகள் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெறும் பாடத்திட்ட மாற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மாணவர்கள் இந்தப் புதிய முறைமைக்கு இசைவாக்கம் அடைவதற்கான விசேட வேலைத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாடத்தெரிவு மற்றும் புதிய மதிப்பீட்டு முறைகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

அத்துடன், இந்தப் புதிய கல்வி முறைமை குறித்துப் பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

புதிய கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான பௌதீக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments