இந்தியத் திரைப்படங்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தானில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படம் கள்ளச்சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 50 பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 16 ரூபாய்) விலையில் இப்படத்தின் போலி குறுந்தகடுகள் (Pirated DVDs) தாராளமாகக் கிடைப்பதை பிரபல யூடியூபர் கார்ல் ராக் (Karl Rock) ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ரெயின்போ சென்டரில் ஒரு கள ஆய்வு
இந்தியாவில் வசித்து வரும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்ல் ராக், அண்மையில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்குச் சென்றிருந்தார்.
அங்குள்ள புகழ்பெற்ற ‘ரெயின்போ சென்டர்’ (Rainbow Centre) பகுதிக்குச் சென்ற அவர், அங்கு சட்டவிரோதப் பதிப்புகள் (Piracy) எந்த அளவுக்கு தாராளமாக விற்கப்படுகின்றன என்பதைப் படம்பிடித்தார்.
அப்போது ஒரு கடைக்காரரிடம் பேச்சு கொடுத்த கார்ல் ராக், சமீபத்தில் வெளியான இந்தியப் படம் இருக்கிறதா என்று கேட்க, அந்த நபர் சற்றும் தயக்கமின்றி ‘துரந்தர்’ படத்தின் குறுந்தகடை எடுத்துக் கொடுத்துள்ளார்.
“இது சமீபத்தில் வெளியான புதிய இந்தியத் திரைப்படம்” என்று அந்த கடைக்காரர் விளக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானுடன் ரன்வீர் சிங்கிற்கு இருக்கும் தொடர்பு
இந்த வீடியோவில் கார்ல் ராக் மற்றொரு சுவாரசியமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தின் நாயகன் ரன்வீர் சிங் ஒரு சிந்தி (Sindhi) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், இந்தியப் பிரிவினையின் போது அவரது தாத்தா, பாட்டி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெட்ஃபிக்ஸ் சாதனையும்.. முரண்பாடுகளும்..
திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’, கடந்த ஜனவரி 30-ம் தேதி நெட்ஃபிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியானது.
வெளியான முதல் வாரத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் முதல் இடத்தைப் பிடித்து ‘டாப் 10’ பட்டியலில் மகுடம் சூடியது.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், “துரந்தர் படத்தின் வெற்றி முன்னெப்போதும் இல்லாத ஒன்று. ஒரே மொழியில் (இந்தி) வெளியான போதிலும், தென்னிந்திய மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் இப்படம் அதிகம்பேரால் பார்க்கப்பட்டத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. சினிமா கதை சொல்லும் முறையையே இப்படம் மாற்றிவிட்டது,” என பெருமிதம் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் கிளம்பும் விமர்சனங்கள்
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து,
இந்திய இணையவாசிகள் பலரும் வியப்புடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
-
“பாகிஸ்தானை விமர்சிக்கும் ஒரு படம், அங்கேயே இவ்வளவு ரசிக்கப்படுவது விந்தையாக இருக்கிறது,” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
-
மற்றொருவர், “இந்தியாவில் சிடி மற்றும் பென்டிரைவ் கலாச்சாரம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பாகிஸ்தானில் இன்னும் இது தொடர்வது ஆச்சரியமாக இருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் தடை ஒருபுறம் இருந்தாலும், எல்லைகளைக் கடந்து இந்தியத் திரைப்படங்களுக்கு இருக்கும் மிரட்டலான வரவேற்பை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


