பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், பங்களாதேஷின் பந்து வீச்சு நிபுணராகவும் பணியாற்றிய மஹ்பூப் அலி ஜாகி, போட்டி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக மாரடைப்பால் காலமானார்.
சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டம் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், ஜாகி திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மஹ்பூப் அலி ஜாகியின் மறைவு பங்களாதேஷ் கிரிக்கெட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் வேகப்பந்து வீச்சுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நன்றியுடன் நினைவு கூறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
பல வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மைதானத்தில் ஏற்பட்ட இந்த திடீர் அனர்த்தத்தைத் தொடர்ந்து, சில்ஹெட் மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் துரிதமாகச் செயற்பட்ட போதிலும், ஒரு சிறந்த பயிற்சியாளரை கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.


