Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிறுவனின் மரணம்;மக்கள் வீதிமறிப்பு போராட்டம்

சிறுவனின் மரணம்;மக்கள் வீதிமறிப்பு போராட்டம்

மலையக நிருபர்

தெரணியகல, நூரி போலீஸ் பிரிவுக்குட்பட்ட நூரி தோட்டத்தில், பெற்றோரின் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக 14 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவன் ரஞ்சிக் குமார் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் தினமும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், போதையில் பிள்ளைகளை மிகக்கடுமையாக துன்புறுத்தி வந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் பிள்ளைகள் உறவினர்களின் வீடுகளிலேயே வளர்ந்து வந்துள்ளனர்.

மூத்த மகன் (17) உடல் ஊனமுற்ற நிலையில், தந்தையின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறார்.

உயிரிழந்த சிறுவன் மற்றும் தம்பி (11) தந்தையின் சிறிய தாயார் வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் (28) ஞாயிற்றுக்கிழமை அறநெறிப் பாடசாலைக்கு செல்வதற்காக ரஞ்சிக் குமார் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் இருந்த தாய் மற்றும் தந்தை இருவரும் சிறுவனை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் தேதி இரவு 9.00 மணி அளவில் சிறுவன் வீட்டில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட மக்கள், அவரை உடனடியாக தெரணியகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். சிறுவனைப் பரிசோதித்த வைத்தியர்கள், சிறுவனின் கழுத்து உடைந்ததில் மரணத்திற்கு காரணம் என மரண விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழப்புக்குக் காரணமான தந்தை மற்றும் தாயை நூரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், மயானத்திற்கு சடலத்தை கொண்டு செல்லும் வழியில் தோட்ட மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேர்மையான விசாரணை சிறுவனின் மரணத்தில் உள்ள மர்மங்களை போலீசார் முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும். தோட்டத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கசிப்பு வியாபாரமே இவ்வாறான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் என்பதால், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தோட்டப் பகுதி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, சிறுவனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது நூரி பகுதியில் அமைதியைப் பேண மேலதிக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments