மத்திய ஆப்பிரிக்க நாட்டான காங்கோவில், தொடர்ந்து ஏற்பட்ட இரண்டு படகு விபத்துகளில் மொத்தம் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோவின் வடமேற்கு ஈக்வேட்டர் மாகாணம், லுகோலிலா பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த முதல் விபத்தில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 107 பேர் உயிரிழந்தனர்; மேலும் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தின் பசன்குசு பகுதியில் மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 86 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அதிக சுமையுடன் இரவில் பயணம் செய்ததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
காங்கோவில் சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதால், மக்கள் மலிவான படகு சேவைகளைப் பயன்படுத்துவதை அதிகம் நம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


