Thursday, March 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஒரே இரவில் மாறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கை!

ஒரே இரவில் மாறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கை!

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்திய சிறுவர்கள், செவ்வாய்க்கிழமை மதியம் துபாயின் முஹைஸ்னாவில் உள்ள அல் குசைஸ் கல்லறையில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் மற்றும் ருக்ஷானா ஆகியோரின் நான்கு மகன்களையும் நல்லடக்கம் செய்ய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால், இறுதிச் சடங்கு ஆழ்ந்த துக்கத்தால் நிறைந்திருந்தது.

சிறுவர்களின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயங்களிலிருந்து மீண்டு வரும் தந்தை, சக்கர நாற்காலியில் வந்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் நடந்த ‘Liwa Festival’-ல் கலந்துகொண்டு குடும்பத்தினர் துபாய்க்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

வாகனம் விபத்துக்குள்ளானபோது, ​​மூன்று சகோதரர்களான அஷாஸ் (14), அம்மார் (12), மற்றும் அய்யாஷ் (5) ஆகியோரும், அந்தக் குடும்பத்தின் வீட்டுப் பணியாளரான புஷ்ரா ஃபயாஸ் யாஹு (49) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மற்ற குழந்தையான அஸ்ஸாம் (7) படுகாயமடைந்து அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிர் தப்பிய பெற்றோரும், உயிருடன் இருக்கும் ஒரே குழந்தையான இஸ்ஸாவும் (10) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இஸ்ஸாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் சடலங்கள் துபாய்க்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு,  பெற்றோரும் ,இஸ்ஸாவும் மருத்துவமனையில் குழந்தைகளை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரு இடங்களிலும் அவர்களுக்காக ஜனாசா தொழுகை எனும் இறுதி தொழுகை நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், நான்கு சகோதரர்களும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

புஷ்ராவின் உடல் திங்கட்கிழமை இரவு கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அங்கு  நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் ரெசிடென்ஸ் விசாக்கள் ராஸ் அல் கைமாவில் வழங்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளை துபாயில் அடக்கம் செய்ய துபாய் அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments