சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை இஸ்லாமியர்கள் தலைமையிலான கிளா்ச்சிப் படையினர் இன்று(டிச. 8) கைப்பற்றிய நிலையில், அதிபர் அல் அஸாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாக கிளா்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதிபர் பஷார் அல் அஸாத் நாட்டை விட்டு வெளியேறியதாக கிளா்ச்சிப் படையினர் அறிவித்ததையடுத்து, சிரியா தலைநகர் டமாஸ்கஸின் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.
“இந்த நாளுக்காக நீண்ட நாள்களாக நாங்கள் காத்திருந்தோம். சிரியாவுக்கான புதிய வரலாற்றை நாங்கள் தொடங்குகிறோம்” என்று டமாஸ்கஸில் உள்ள புறநகர்ப் பகுதிகள் மக்கள் தெரிவித்தனர்.
சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைமைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், மக்கள் யாரும் பொது சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் எனவும் சிரிய பிரதமர் முகமது அல் ஜிலாலி தெரிவித்தார்.
ராணுவ படைகள் வெளியேறுவதற்கு முன்பாகவே, டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் வழியாக, சிரியாவை விட்டு தப்பிச் சென்றார் அதிபர் பஷார் அல் அஸாத்.
தலைநகரை கைப்பற்றிய கிளா்ச்சிப் படையினர்
தலைநகா் டமாஸ்கஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள், பெரும்பாலான மகாணங்கள் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்துவந்த நிலையில், அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறினா். இந்த எதிா்பாராத அதிரடியை தாக்குப் பிடிக்க முடியாத ராணுவம் பின்வாங்கியது.
ஹமா நகரின் பாதுகாப்பு அரணும் தகா்க்கப்பட்டதால் அங்கிருந்தும் வெளியேறியதாக சிரியா ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, அந்த நகரையும் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா்.
இந்தச் சூழலில், கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினா்.
தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நகரான ஹமாவும் அவா்களிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது. சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் அவா்கள் கைப்பற்றும் நிலை உள்ளது.
இந்த நிலையில், தலைநகா் டமாஸ்கஸையும் கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ளனர்.