கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மருத்துவ பீடத்தில் வெள்ளிக்கிழமை (06) தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற டிஜிட்டல் நூலக மாநாடு 2024 இல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது:
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக முதலீடு செய்வதை நாங்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்வது அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு இன்றியமையாதது என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த அதே திசையில் அல்லாமல், நாட்டை புதிய பாதையில் இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது ஆராய்ச்சி, சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக நாம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினை, குறிப்பாக உயர் மட்டங்களில் முடிவெடுப்பதில், விஞ்ஞானபூர்வ அடிப்படையில், ஆதாரங்களின் அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல் இருப்பதாகும். இது மாற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே, முடிவெடுக்கும் செயன்முறையும் ஆராய்ச்சி சமூகமும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும்.
முடிவெடுக்கும் செயன்முறை மட்டுமன்றி, திறன் கொண்ட கொண்ட நாடாக நாம் முன்னேற, புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் நாட்டிற்கு பலமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை தேவை. இதுவரையில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் முதலீடு மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளது, படிப்படியாக அதை மாற்றுவோம் என்று நம்புகிறோம்.
உற்பத்தி, புத்தாக்கம் போன்றே குறிப்பாக அளவு, தரம் மற்றும் தரநியமங்கள் ஆகியவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சமன் செனவீர, பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேபாலிகா சுதசிங்க, தேசிய விஞ்ஞான நூலக வள நிலையத்தின் தலைவர் மஞ்சுள கருணாரத்ன உட்பட ஆய்வாளர்கள், நூலகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.