அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து பிரதான மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சந்தைக்கு அரிசி விநியோகிக்க பிரதான அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகிறது.
சந்தைக்கு அரிசியை விநியோகிக்காத அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு இனி கடன் வழங்கப்படமாட்டாது என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருசில இணக்கப்பாடுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம்.
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்புகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களுக்கு பூரண இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய செயற்படாவிடின் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். இணக்கப்பாடுகளில் இருந்து விலகி சர்வதேச மட்டத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாடு என்ற ரீதியில் சர்வதேச தரப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிலை காணப்படுகிறது.
சந்தையில் அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன. நாளாந்தம் 6500 மெற்றிக் தொன் அரிசிக்கான தேவை காணப்படுகிறது. அரிசி உற்பத்தியை காட்டிலும் நுகர்வு அதிகளவில் காணப்படுகிறது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து பிரதான மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
குறுகிய கால திட்ட அடிப்படையில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தைக்கு அரிசி விநியோகிக்க பிரதான அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய நாளாந்தம் 1 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகிறது.
பிரதான அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் அரச வங்கிகளிடமிருந்து 15 பில்லியன் ரூபா வரை கடன் பெற்றுள்ளார்கள். சந்தைக்கு முறையாக அரிசி விநியோகிக்கப்பட வேண்டும் இல்லையேல் இனி கடன் வழங்கப்படமாட்டாது என்பதை அறிவித்துள்ளோம் என்றார்.