அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகாக பதிவாகியிருந்தது. பெர்ண்டேல் நகருக்கு மேற்கு-தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நிலநடுக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. கடைகளில் உள்ள பொருட்கள் அலமாரிகளில் இருந்து விழுந்தன. பல குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். நிலநடுக்கத்தால் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன.
7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள வட கடலோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி ஏற்படலாம் என சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.