அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கும் இடம் பெற்றுள்ளார். இதன்படி பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம், தொழிலாளர் துறை, தேசிய சுகாதார மைய இயக்குநர் மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு டிரம்ப், நபர்களை நியமனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் நியமித்து உள்ளார். ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் கோடீசுவரராவார். இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார் என கூறியுள்ளார். ஜாரெட் அவருடைய மனைவி மோனிகா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.