மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று(டிச. 5) பதவியேற்றுக் கொண்டது.
மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘மகாயுதி’ கூட்டணி வெற்றி
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
அதேநேரம், எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.
பாஜகவின் மத்திய பாா்வையாளா்களான மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மகாராஷ்டிர முதல்வராகவும், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராகவும் தேவேந்திர ஃபட்னவீஸ் (54) ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.