ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி சார்பில் ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்சென், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்திய அணியின் பொறுப்பு கேப்டனும்,0 வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹரிஸ் ராஃப்
22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வெல்லுவதற்கு முக்கிய பங்காற்றிய ஹரிஸ் ராஃப் ஐசிசி சிறந்த வீரருக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
31 வயதான ஹரிஸ் ராஃப் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் அடுத்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், கடைசிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார்.
அதே ஃபார்மில் 2-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளுடன் மொத்தமாக 5 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவம்பர் மாதத்தில் மட்டும் அவர் 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மார்கோ யான்சென்
24 வயதான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மார்கோ யான்சென், நவம்பர் மாதம் நடைபெற்ற அனைத்து பார்மட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய மார்கோ யான்சென் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 17 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்க அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அதோடு தொடர்ச்சியாக, இலங்கைக்கு எதிரான போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சென், முதல் இன்னிங்ஸ்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை 42 ரன்களுக்கு சுருட்டினார். அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஜஸ்பிரித் பும்ரா
பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்று கொடுத்த இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் ஐசிசி சிறந்த வீரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ராவின் அதிரடியால், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா மொத்தமாக 8 விக்கெட்டுகளை (5/30 மற்றும் 3/42) வீழ்த்தினார்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவரது அசத்தலான ஆட்டங்கள் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.