கடந்த ஜூலை மாதம், வங்கதேசத்தின் பிரதமாரக இருந்த ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாஙத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய நாடுத்தழுவிய போராட்டம் புரட்சியாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, ஷேக் ஹசீனா நாடு தப்பி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தார்.
இந்தப் புரட்சியினால் அந்நாடு முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன. இதன் ஒர் அங்கமாக கடந்த ஜூலை 19ம் தேதியன்று தலைநகரான டாக்காவிலிருக்கும் ஒர் சிறைச்சாலை போராட்டக்காரர்களினால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்பொழுது அந்த சிறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் நான்கு முக்கிய சிறைச்சாலைகளையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றி தாக்கினர். இந்த தாக்குதல்களில் அந்த சிறைகளிலிருந்த சுமார் 2,200 கைதிகள் தப்பித்தனர்.
இதுகுறித்து சிறைத்துறை தலைமை அதிகாரி சையது முஹம்மது மொதாஹர் ஹூசைன் கூறுகையில், “சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகளில் 1500 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 700 கைதிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறினார். மேலும், இதில் தலைமறைவாகியுள்ள 70க்கும் மேற்ப்பட்டவர்கள் தீவிரவாதிகள் மற்றும் மரண தண்டனைக் கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் கைப்பற்றப்பட்டு உடைக்கப்பட்ட சிறைச்சாலைகளில் வங்கதேசத்தின் காசிம்பூரிலுள்ள உயர்பாதுகாப்பு சிறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.